தென் கொரியாவில் 'டேட்டிங் ஆப்' மூலம் அறிந்த ஆண்களுக்கு போதை மற்றும் மனநல மருந்துகள் கலந்த பானங்களை கொடுத்து, அவர்களிடமிருந்து பணம் பறித்த 20 வயது இளம்பெண் கிம் சோ-யங், தற்போது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இவர் மீதான வழக்கில், தென் கொரிய அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் மரண தண்டனை கோரியுள்ளனர். ஆடம்பர வாழ்க்கைக்காக ஆண்களை பலிவாங்கிய இவர், இதுவரை இரண்டு ஆண்களை கொன்றும், நான்கு பேரை மயக்கமடையச் செய்தும் உள்ளார்.
குற்றத்திற்கு முன்னதாக, "மதுவில் தூக்க மாத்திரை கலந்தால் மரணம் ஏற்படுமா?" என்று சாட்ஜிபிடியில் தேடிய அதிர்ச்சி தகவலும் விசாரணையில் வெளியாகியுள்ளது.
ஆரம்பத்தில் இவரது புகைப்படங்களை பார்த்து இணையத்தில் பலர் ஆதரவு தெரிவித்த நிலையில், கொடூர முகம் வெளிச்சத்துக்கு வந்ததும் 'மிக அழகான கொலையாளி' என்று மக்கள் இவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
சியோல் நீதிமன்றத்தில் நடைபெற்ற இறுதி விசாரணையில், குற்றவாளிக்கு பிறர் மீது இரக்கமில்லாத மனநலப் பாதிப்பு இருப்பதாகவும், தான் செய்த குற்றத்திற்காக சிறிதும் வருந்தவில்லை என்றும் வழக்கறிஞர்கள் வாதிட்டனர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் கண்ணீருடன் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
