கன்னட திரையுலகின் இளம் நடிகை மற்றும் பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளராக அறியப்படும் திவ்யா சுரேஷ், தனக்கு நடந்ததாக கூறப்படும் பாலியல் தொல்லை சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பெங்களூருவில் வசித்து வரும் நடிகை திவ்யா சுரேஷ், சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது பதிவுகளை பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் தனக்கு நேர்ந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து அவர் வெளியிட்ட வீடியோ தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது, இரவு சுமார் 11 மணியளவில் தனது உறவுக்கார சகோதரியுடன் வெளியில் சென்றிருந்த போது, காரில் ஏறுவதற்காக நடந்து சென்றுகொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார். அப்போது ஒரு வாலிபர் தங்களை பின்தொடர்ந்து வந்து திடீரென தன்னை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அந்த நபரை கண்டித்தபோதும் அவர் நடத்தை மாற்றாமல் தொடர்ந்து அத்துமீறியதாகவும், இதனால் தாங்கள் அச்சமடைந்து விரைவாக காரில் ஏறி பாதுகாப்பாக சென்றதாகவும் நடிகை தெரிவித்துள்ளார்.
மேலும், அருகில் இருந்த ஒருவர் அந்த நபரை கண்டித்தபோதும் அவர் அத்துமீறலை நிறுத்தவில்லை என்றும், தொடர்ந்து அநாகரிகமாக நடந்துகொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். சம்பவம் தொடர்பான வீடியோ ஆதாரத்தையும் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டு, பெங்களூரு காவல்துறையையும் டேக் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
