மியான்மரில் தேர்தல் நடத்தப்படும் என ராணுவம் அறிவித்த காலகட்டம் முதல் வாக்குப்பதிவு நிறைவடைந்த காலம் வரை, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.நா. வெளியிட்ட தகவலின்படி, மியான்மரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை நடைபெற்ற ராணுவ நடவடிக்கைகளில் குறைந்தபட்சம் 702 பேர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ராணுவம் தனது அதிகாரத்தை வலுப்படுத்தவும், கிளர்ச்சிக் குழுக்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீண்டும் கைப்பற்றவும் நடத்திய தாக்குதல்களில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 224 பெண்களும், 153 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வான்வழித் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட போர் விமானங்கள் மற்றும் டிரோன்கள் பொதுமக்கள் உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாக இருந்ததாக ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.
702 பேர் உயிரிழந்ததற்கு யார் பொறுப்பு என்ற கேள்விக்கு பதிலளித்த ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ரவீனா ஷம்தாசனி, கிடைத்த நம்பகமான தகவல்களின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும், இது முழுமையான புள்ளிவிவரம் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
மியான்மரில் கடந்த 2021-ஆம் ஆண்டு ராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தியதைத் தொடர்ந்து உள்நாட்டுப் போர் தீவிரமடைந்தது. இதனால் பல ஆண்டுகளாக அங்கு அரசியல் குழப்பமும் வன்முறையும் நீடித்து வருகிறது.
அதன் பின்னர் ராணுவ கட்டுப்பாட்டில் நடைபெற்ற தேர்தலில், ராணுவ ஆதரவு பெற்ற அரசியல் கட்சிகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டன. பின்னர் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மின் ஆங் லாயிங்கை அதிபராக தேர்வு செய்தனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
