உக்ரைன் மீது நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலடி நடவடிக்கையாக ரஷியா நடத்திய கடுமையான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் கீவ் நகரில் 21 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் சுமார் 90 பேர் காயமடைந்துள்ளனர்.
ரஷியாவின் மாஸ்கோவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு மையங்கள் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலுக்குப் பதிலாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக 74 ஏவுகணைகள் மற்றும் 496 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு, சுமார் 11 மணி நேரம் நீடித்த மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலில் உக்ரைனின் தலைநகர் கீவ் கடுமையாக பாதிக்கப்பட்டது. உக்ரைன்-ரஷியா போர் 2022 பிப்ரவரியில் தொடங்கி நீடித்து வரும் நிலையில், இரு தரப்பிலும் உயிரிழப்புகள் மற்றும் கட்டமைப்பு சேதங்கள் அதிகரித்து வருகின்றன. லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
போருக்கு தீர்வு காண அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்த முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், இதுவரை எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனால், தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
ரஷிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவலின்படி, உக்ரைன் சமீபத்தில் நடத்திய தாக்குதலால் ரஷியாவின் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டதாகவும், அதற்கான பதிலடியாகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
