ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஜுர்ம் பகுதியில் நேற்று நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 அலகுகளாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நில அதிர்வு ஆய்வு மையத்தின் (NCS) தகவலின்படி, இந்திய நேரப்படி இரவு 11.27 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது பூமிக்கு அடியில் சுமார் 173 கிலோமீட்டர் ஆழத்தில் உருவானதாக பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் தொடர்பான எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
ஆப்கானிஸ்தான் அமைந்துள்ள இந்து குஷ் மலைப் பகுதி, உலகின் அதிக நில அதிர்வு செயல்பாடுகள் உள்ள பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்திய மற்றும் யூரேசிய புவித்தட்டுகள் சந்திக்கும் பகுதியில் ஆப்கானிஸ்தான் அமைந்துள்ளதால், அந்நாடு அடிக்கடி நிலநடுக்கங்களை எதிர்கொள்கிறது.
செஞ்சிலுவைச் சங்கத்தின் தகவல்களின்படி, இந்த பகுதியில் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.
மேலும், ஹெராட் உள்ளிட்ட சில பகுதிகள் வழியாக முக்கியமான புவிப்பிளவு கோடுகள் கடந்து செல்கின்றன. இதனால் நிலநடுக்கம் மட்டுமின்றி நிலச்சரிவு மற்றும் பருவகால வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களாலும் ஆப்கானிஸ்தான் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடாக உள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
