வெளிநாடுகளில் தலைமறைவாக செயல்பட்டு வந்த 95 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார். இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனை அறிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், 2024 ஆம் ஆண்டில் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலின் அடிப்படையில் 10 சந்தேகநபர்களும், 2025ஆம் ஆண்டில் 11 சந்தேகநபர்களும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு கடத்தல் சட்டத்தின் கீழ் மொத்தமாக 21 சந்தேகநபர்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு அதிகாரிகள் வெற்றியடைந்துள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து குற்றச் செயல்களை முன்னெடுத்து வந்த பல குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இன்று ஐக்கிய அரபு இராச்சியம், அபுதாபி சர்வதேச பொலிஸ், டுபாய் பொலிஸ் மற்றும் தூதரகங்களின் ஒத்துழைப்புடன் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பல கொலைச் சம்பவங்கள் மற்றும் நிதி மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

