வளைகுடா பிராந்தியத்தில் ஈரான்-அமெரிக்கா இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இரு தரப்பும் அவ்வப்போது தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெறும் பரஸ்பர தாக்குதல்கள், வளைகுடா பிராந்தியத்தில் நிரந்தர அமைதி ஏற்படுவதில் தொடர்ந்து சிக்கலை ஏற்படுத்தியுள்ளன.
இந்த பரபரப்பான சூழலில், ஹார்முஸ் நீரிணையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் AH–64 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர் ஒன்று ஈரானின் ஷாஹெட் (Shahed) வகை டிரோன் தாக்குதலில் சிக்கி சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் இருந்த இரண்டு விமானிகளும் ஒரு அமெரிக்க கடற்படை ட்ரோன் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உறுதிப்படுத்தினார்.
வளைகுடா போர் மற்றும் ஈரான் கடற்பகுதி முற்றுகையில் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் முக்கிய பங்கு வகித்து வருவதால், அதைச் சுட்டு வீழ்த்திய சம்பவம் அமெரிக்காவுக்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்பு, தரைத்தள கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் ரேடார் நிலையங்களை குறிவைத்து அமெரிக்கா வான்தாக்குதலைத் தொடுத்தது. பந்தர் அப்பாஸ் மற்றும் காசிம் தீவுகளில் இந்த தாக்குதல் நடந்ததாக ஈரானும் அறிவித்தது, எனினும் சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதனைத் தொடர்ந்து ஈரானும் பதிலடி தாக்குதலைத் தொடங்கியது.
இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஜூன் 11, 2026 அன்று டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் வலைத்தளத்தில் ஒரு அதிரடி பதிவை வெளியிட்டுள்ளார். அதில்: “ஈரானின் கடற்படை, விமானப்படை, ரேடார், வான்பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பெரும்பாலான தாக்குதல் திறன்கள் அழிக்கப்பட்டுவிட்டன. அமெரிக்கா இன்று இரவு ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதலை நடத்தும்.” மேலும், “எதிர்காலத்தில் ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு மற்றும் பிற எண்ணெய் உள்கட்டமைப்பு பகுதிகளை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும். வெனிசுலாவில் செய்ததைப் போல, ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தைகளை முழுமையாகக் கட்டுப்படுத்துவோம்” என்று கூறியுள்ளார்.
கார்க் தீவு ஈரானின் மொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 90 முதல் 95 சதவீதத்தைக் கையாளும் மிக முக்கியமான பொருளாதார மையமாகும். பல மாதங்களாக அதனைக் கைப்பற்றும் திட்டம் அமெரிக்க பாதுகாப்புத் துறையிடம் உள்ளதாகவும், ஆனால் அதிக இழப்புகளை ஏற்படுத்தும் ஒரு 'இறுதி முயற்சி' என்று கருதப்படுவதாகவும் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், ஈரானும் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளதுடன், மேலும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. எனவே, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான இந்த பரஸ்பர தாக்குதல்கள் மற்றும் டிரம்பின் புதிய எச்சரிக்கையானது மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

