கொழும்பு பெஸ்டியன் மாவத்தையில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று திருடப்பட்டு, பின்னர் பேலியகொட பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியாவிலிருந்து நொச்சியாகம வரை இயக்கப்பட்டு வந்த குறித்த பேருந்து, மீண்டும் வவுனியா நோக்கிச் செல்வதற்காக நேற்று முன்தினம் அதிகாலை கொழும்பு பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அதிகாலை வேளையில் பேருந்தின் சாவியை வழமைபோல இரகசிய இடத்தில் மறைத்து வைத்துவிட்டு அதன் ஓட்டுநர் கீழே இறங்கியுள்ளார். எனினும், பகல்நேர சேவைக்காக மற்றொரு ஓட்டுநர் அங்கு வந்தபோது பேருந்து காணாமல் போயிருந்தது தெரியவந்தது.
உடனடியாக மத்திய பேருந்து நிலைய நிர்வாகத்திற்கு தகவல் வழங்கப்பட்டு, புறக்கோட்டைப் பகுதி முழுவதும் தேடியும் பேருந்து கிடைக்காததால் காவல்துறையினரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டு தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதற்கிடையில், பேலியகொட பகுதியில் உள்ள வீதியொன்றில் குறித்த பேருந்து அநாதரவாக நிறுத்தப்பட்டிருப்பதாக வேறொரு பேருந்து ஓட்டுநர் அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளார். அதனடிப்படையில் அங்கு சென்ற காவல்துறையினர் பேருந்தைக் மீட்டனர். எனினும், பேருந்தின் எரிபொருள் தொட்டியில் இருந்த டீசல் முழுவதும் திருடப்பட்டிருப்பது சோதனையின் போது தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக புறக்கோட்டை காவல்துறையினரும் மத்திய பேருந்து நிலைய விசாரணை அதிகாரிகளும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அத்துடன், கொழும்பு கைரேகை பதிவு அலுவலக அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பேருந்திலிருந்து முக்கிய தடயங்களை சேகரித்துள்ளனர்.
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in sri lanka news and world news on Thalaimurai.