ஆசிய விளையாட்டுப் போட்டியின் 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்திய அணி அபாரமாகச் செயல்பட்டு வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது. முன்னதாக இன்று காலை நடைபெற்ற தகுதிச்சுற்றில் இந்தியா சார்பில் பூவம்மா மாச்செட்டிரா, விஷால் தென்னரசு, டி.எஸ்.மனு மற்றும் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் ஆகியோர் களமிறங்கினர்.
பந்தய தூரத்தை 3 நிமிடம் 16.23 வினாடிகளில் கடந்து இரண்டாவது இடம் பிடித்ததன் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது. இறுதிப்போட்டிக்கு முன்னேறிய எட்டு அணிகளில் பஹ்ரைன், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகள் இந்தியாவை விட பந்தய நேரக் கணக்கில் முன்னிலையில் இருந்தன.
இன்று மாலை நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், தொடக்கத்தில் பின்தங்கியிருந்த இந்திய அணியைக் கடைசிச் சுற்றில் ஓடிய வித்யா ராம்ராஜ் முன்னிலைக்குக் கொண்டு வந்தார். வியட்நாம் வீராங்கனையின் கடும் சவாலை முறியடித்து இறுதிவரை போராடியதன் மூலம் இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் உறுதியானது.
இந்திய அணி பந்தய தூரத்தை 3 நிமிடம் 14.46 வினாடிகளில் கடந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தது. பஹ்ரைன் அணி 3 நிமிடம் 12.87 வினாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கத்தையும், வியட்நாம் அணி 3 நிமிடம் 14.54 வினாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் தடகளப் பிரிவில் அதிகபட்சமாக 35 வீரர்கள், 40 வீராங்கனைகள் உட்பட 75 பேர் பங்கேற்றுள்ளனர். முன்னதாக நடைபெற்ற 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சீமா குமாரி வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
கலப்பு தொடர் ஓட்டத்தின் வெள்ளிப் பதக்கத்துடன் சேர்த்து இந்தியா இதுவரை ஒரு தங்கம், ஏழு வெள்ளி, ஒன்பது வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது.
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in sri lanka news and world news on Thalaimurai.