கைது செய்வதற்காகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
வாகனத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகவே தம்மால் குறிப்பிட்ட நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாமல் போனதாக அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மஞ்சுள பத்திராஜ நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
எனவே, பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையைத் திரும்பப் பெறுமாறும் அவர் நீதவானிடம் கோரினார்.
எனினும், இக்கோரிக்கையை நாளை (22) சீராய்வு மனுவொன்றின் ஊடாகச் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரம உத்தரவிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் இளவரசர் செயித் அல்-ஹுசைன் 2016 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது, கொழும்பு தும்முல்லையில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தைச் சுற்றியுள்ள வீதிகளை மறித்துப் போராட்டம் நடத்தியமை தொடர்பில் விமல் வீரவன்ச சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in sri lanka news and world news on Thalaimurai.