நாடளாவிய ரீதியில் நிலவி வரும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக 13 மாவட்டங்களைச் சேர்ந்த 583 குடும்பங்களைச் சேர்ந்த 2,113 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இருவர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஒருவர் காணாமல் போயுள்ளனர்.
மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு போன்ற அனர்த்தங்களால் ஒரு வீடு முழுமையாகவும், 213 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழையால் ஜின் கங்கை மற்றும் நில்வளா கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் சடுதியாக உயர்வடைந்துள்ளது. இதன் காரணமாகப் பல வீதிகளும் தாழ்நிலப் பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.
குறிப்பாக, அக்குரஸ்ஸ - சியம்பலாகொட - பஸ்கொட வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அப்பகுதிக்கான போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மாற்று வீதிகளைப் பயன்படுத்த முற்பட்டாலும், அவ்வீதிகளில் ஏற்பட்டுள்ள பாரிய குழிகளால் பயணம் மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
மேலும் அக்குரஸ்ஸ - மாரகொடை மற்றும் மொரவக்க - நெலுவ வீதிகளின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி வருவதால் போக்குவரத்துத் தடைகள் ஏற்பட்டுள்ளன.
இதேவேளை, எட்டு பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதற்கமைய, மாத்தறை மாவட்டத்தின் பஸ்கொட, கொட்டபொல, பிட்டபெத்தர, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்படை, கம்புறுபிட்டிய மற்றும் திஹகொட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், நீர்வரத்து அதிகரித்துள்ளதன் காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவும், பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in sri lanka news and world news on Thalaimurai.