அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் கைதி ஒருவருக்கு இரண்டு முறை விஷ ஊசி செலுத்தியும் உயிர் பிரியாத அசாதாரண சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, 2026-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்படவிருந்த அனைத்து மரண தண்டனை உத்தரவுகளையும் உடனடியாக நிறுத்தி வைக்க டென்னசி மாகாண கவர்னர் பில் லீ உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 1995-ஆம் ஆண்டு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாமில் பயிற்சியாளர்களாகப் பணியாற்றியபோது ஏற்பட்ட தகராறில், சகப் பெண்ணான 19 வயது கொலீன் ஸ்லெம்மரை, அப்போது 18 வயதாக இருந்த கிறிஸ்டா பைக் தனது 17 வயது காதலன் டடாரில் ஷிப் என்பவருடன் சேர்ந்து ஆள் நடமாட்டமற்ற பகுதிக்கு அழைத்துச் சென்று கொடூரமாக அடித்துக் கொலை செய்தார்.
கொல்லப்பட்ட பெண்ணின் மார்பில் சாத்தான் வழிபாட்டுக் குறியீடுகள் செதுக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்ட இச்சம்பவம் அப்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரில், கிறிஸ்டா பைக்கிற்கு மரண தண்டனையும், மைனராக இருந்த டடாரில் ஷிப்பிற்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இதையடுத்துத் தொடரப்பட்ட மேல்முறையீடுகளில், தனது இளமைக் கால பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் மனநலப் பிரச்சினைகளைக் காரணம் காட்டி கிறிஸ்டா தரப்பு ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரியது.
தற்போது 50 வயதாகும் கிறிஸ்டா தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்த போதிலும், கொலைக் குற்றத்தை நியாயப்படுத்த முடியாது எனக் கூறி மரண தண்டனையை நீதிமன்றம் உறுதிசெய்ததுடன், விஷ ஊசி மூலம் அதை நிறைவேற்ற உத்தரவிட்டது.
இதன்படி நாஷ்வில் சிறைச்சாலையில் செப்டம்பர் 30-ஆம் தேதி கிறிஸ்டாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் பணிகள் தொடங்கின. முதல் முறை விஷ ஊசி செலுத்தப்பட்டு எவ்வித மாற்றமும் ஏற்படாததால், இரண்டாவது முறையும் விஷ ஊசி செலுத்தப்பட்டது.
எனினும், அவரது இதயத் துடிப்பு நிற்காமல் உயிர் பிரியாததால், வழக்கறிஞர்களின் அவசர மனுவை ஏற்று நீதிமன்ற உத்தரவுப்படி அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஊசி செலுத்துவதற்கான நரம்பைக் கண்டுபிடிக்க உதவியாளர்கள் திணறியதாகவும், ஊசி தோல்வியுற்றால் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவான வழிகாட்டுதல்கள் சிறை நிர்வாகத்திடம் இல்லை எனவும் வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
டென்னசி மாகாணத்தில் கடந்த 200 ஆண்டுகளில் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட இருந்த முதல் பெண் என்ற சூழலில், விஷ ஊசி நடவடிக்கை தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மேலும், இந்த விவகாரத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மாகாணத்தில் இந்த ஆண்டு திட்டமிடப்பட்ட அனைத்து மரண தண்டனைகளையும் கவர்னர் பில் லீ இடைநிறுத்தம் செய்துள்ளார்.
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in sri lanka news and world news on Thalaimurai.