2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு சதித்திட்டம் தீட்டியமை, அதற்கு உடந்தையாக இருந்தமை மற்றும் தீவிரவாதப் பிரசாரங்களை முன்னெடுத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 15 பேருக்குமான தண்டனை விவரங்களை கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது.
நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்சங்க ஆகிய மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கின் தீர்ப்பை வழங்கியுள்ளது. அதேநேரம், வழக்கின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் போதிய சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததால் ஒன்பது பிரதிவாதிகள் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, குற்றவாளிகளாகக் காணப்பட்ட 15 பேரில் ஐந்து பேருக்கு தலா 200 ஆண்டுகளும், மேலும் ஐந்து பேருக்கு தலா 220 ஆண்டுகளும், நான்கு பேருக்கு தலா 240 ஆண்டுகளும், ஒருவருக்கு 260 ஆண்டுகளும் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தண்டனைக்குரிய குற்றவாளிகளுக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை அரசுடைமையாக்குமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மொஹம்மது நௌஃபர் மௌலவி, மொஹமட் சரீப் ஆதம் லெப்பை (கபூர் மாமா), ஹயாத்து மொஹம்மது அஹமது மில்ஹான், மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா, மொஹமட் இப்ராஹிம் சாஹிட் அப்துல் ஹக், மொஹமட் அன்வர் மொஹமட் ரிஸ்கான், மொஹமட் மன்சூர் மொஹமட் சனஸ்தீன், அப்துல் மனாஃப் மொஹமட் பிர்தௌஸ், மொஹமட் ரமீஸ் மொஹமட் சாஜித், அப்துல் லத்தீப் மொஹமட் சாஃபி, ஹுஸைனுல் ரிஸ்வி காலித் சமீர், மொஹமட் ஹனீபா செய்னுல் ஆப்தீன், மொஹமட் முஸ்தபா மொஹமட் ஹாரிஸ், ராசிக் ரசா ஹுசைன் மற்றும் கச்சி மொஹம்மது மொஹம்மது ஜெம்சித் ஆகியோரே சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 15 பிரதிவாதிகளாவர்.
அதேசமயம், மொஹமட் சவாஹிர் மொஹமட் ஹசன், மொஹமட் இஃப்திகார் மொஹமட் இன்சாஃப், ரஷீட் மொஹமட் இப்ராஹிம், செய்னுல் ஆப்தீன் மொஹமட் ஜஸீம், மொஹமட் முஸ்தபா மொஹமட் ரிஸ்வான், மீரா சாஹிப் மொஹமட் நஃப்லி, மொஹமட் அமீர் மொஹம்மது அயதுல்லா, மொஹமட் அன்சார்தீன் மொஹமட் ஹில்மி மற்றும் மொஹமட் அக்ரம் அஹ்கம் ஆகிய ஒன்பது பேரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் 17ஆவது சந்தேகநபராகக் குறிப்பிடப்பட்டிருந்த யாசிம் பாவா அப்துல் ரவூப், வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியிலேயே உயிரிழந்திருந்தார்.
269 பேரின் உயிர்களைப் பறித்து 500க்கும் மேற்பட்டோரைப் படுகாயமடையச் செய்த இந்த கொடூரத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், 23,270க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை உள்ளடக்கி சட்டமா அதிபரால் 8,900 பக்கங்களைக் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
அரசு தரப்பில் 2,309 சாட்சிகள் சாட்சியமளித்திருந்த நிலையில், கடந்த ஓகஸ்ட் 24ஆம் திகதி சாட்சி விசாரணைகள் முழுமையாக நிறைவடைந்தன. இந்த இறுதித் தீர்ப்பு வெளியாவதை முன்னிட்டு கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், மோப்ப நாய்கள் மற்றும் மொபைல் சிசிடிவி வாகனங்கள் சகிதம் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in sri lanka news and world news on Thalaimurai.