நாட்டில் கடந்த மூன்று நாட்களில் மழைவீழ்ச்சி 300 மில்லிமீற்றரைத் தாண்டியுள்ளதுடன், மழையின் தீவிரம் தொடரும் பட்சத்தில் மண்சரிவு, கற்பாறைகள் உருண்டு விழுதல், நிலம் தாழிறங்குதல் மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுதல் போன்ற அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.
இதுவரை பாரிய அளவிலான மண்சரிவுகள் எதுவும் பதிவாகவில்லை என்ற போதிலும், 35 சிறிய அளவிலான நிலச்சீரற்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவை சிறிய சம்பவங்களாக இருந்தாலும், தொடரும் கனமழை காரணமாக அவை தீவிரமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது மண்சரிவு அபாயம் கொண்ட 14 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழைவீழ்ச்சி மேலும் அதிகரித்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும் பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால், தத்தமது பிரதேசங்களுக்குரிய எச்சரிக்கைகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in sri lanka news and world news on Thalaimurai.