நாடு முழுவதையும் அச்சுறுத்தி வரும் பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக அரசாங்கம் எவ்வித தயக்கமும் இன்றி உறுதியான போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இப்பாகமுவையில் நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சமீபத்திய சோதனைகளின் போது பாதாள உலகக் குழுக்களிடமிருந்து 93 T-56 ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நிக்கவெரட்டிய காவல் நிலையத்தில் கூட இவ்வளவு துப்பாக்கிகள் இல்லை என்றும், இதுவரை மொத்தம் 139 துப்பாக்கிகள் மற்றும் 104 ரிவோல்வர்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
பாதாள உலகத்தின் பிடி எந்தளவுக்கு வேரூன்றியிருந்தது என்பதற்கு இந்த ஆயுதப் பிரயோகமே சான்றாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கலாச்சாரத்திற்கு அரச கட்டமைப்புக்குள்ளேயே பாதுகாப்பு இருந்ததாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, காவல்துறையிலும் சில அரசாங்க நிறுவனங்களிலும் கூட இத்தகைய குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சிறிய அளவிலான அரசியல் பாதுகாப்பைத் தற்போது அரசாங்கம் முழுமையாக இல்லாதொழித்து வருவதாகத் தெரிவித்தார். பாதாள உலகத்திற்கு எதிரான இந்த நேரடி மோதலுக்கு அரசாங்கம் முழுமையாகத் தயாராக இருப்பதாகவும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
அரசாங்கத்தின் கடுமையான நடவடிக்கைகளால் அச்சமடைந்துள்ள பாதாள உலகக் குழுக்கள், தங்களின் குற்றப் பேரரசைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் அரசாங்கத்தை வீழ்த்த போதைப்பொருள் பணத்தை வாரி இறைத்து வருவதாக ஜனாதிபதி குற்றம்சாட்டினார்.
அரசாங்கத்திற்கு எதிரான சில ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் மற்றும் சில இணையதளங்கள், யூடியூப் சேனல்களுக்கு இந்தப் பணம் செலவிடப்படுவதாகவும், எத்தகைய சதித்திட்டங்கள் வந்தபோதிலும் நாட்டின் பாதுகாப்பையும் மக்களின் அமைதியையும் உறுதிப்படுத்த பாதாள உலகம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பில் அரசாங்கம் உறுதியாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in sri lanka news and world news on Thalaimurai.