சமூக வலைத்தளப் பதிவு தொடர்பாக சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரை விடுவிக்கக் கோரி, கொழும்பிலுள்ள சவூதி அரேபியத் தூதரகத்தில் அவரது குடும்பத்தினரும் சமூக செயற்பாட்டாளர்களும் அவசர மனுவொன்றைக் கையளித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை நட்பிட்டிமுனையைச் சேர்ந்த அனோஜன், தொழில் வாய்ப்புக்காக சவூதி அரேபியா சென்று 9 மாதங்களே ஆகியுள்ள நிலையில், சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட மதம் சார்ந்த கருத்து தொடர்பாகக் கைது செய்யப்பட்டார்.
ஆரம்பத்தில் சவூதி நீதிமன்றத்தால் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்த போதிலும், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மேல்முறையீட்டின் போது அத்தண்டனை மரண தண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தீர்ப்பினால் அதிர்ச்சியடைந்த அனோஜனின் தாயார் சவூதி தூதரகத்திற்கு முன்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், தான் சவூதி தூதரகத்தை மதிப்பதாகவும், தனது மகன் செய்த தவறுகளை மன்னித்து மரண தண்டனையிலிருந்து விடுவித்துத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன் தன் மகனைக் காப்பாற்ற இலங்கை அரசாங்கமும் தூதரகமும் உடனடியாக முன்வர வேண்டும் என்றும் அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த முதலிகே மற்றும் சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ராஜீவ் ஆகியோருடன் வருகை தந்த குடும்பத்தினர், தூதரக அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் கவனத்திற்கும் இவ்விவகாரத்தை கொண்டு சென்று முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.
இச்சம்பவம் இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவை சவூதி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றன.
தீர்ப்பு தொடர்பான உத்தியோகபூர்வ ஆவணங்கள் கிடைத்தவுடன், 30 நாட்களுக்குள் சவூதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான சட்ட ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அரசாங்கம் உயர்மட்ட இராஜதந்திர தலையீட்டை மேற்கொண்டு அனோஜனின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in sri lanka news and world news on Thalaimurai.