ஈரான் உடனான மோதல் அமெரிக்காவில் எதிர்வரும் இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சிக்குத் தேர்தல் ரீதியான பாரிய இழப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற சாத்தியக்கூற்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மருமகள் லாரா ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளார்.
வெள்ளை மாளிகை நிர்வாகம் இதுவரையில் பெரியளவில் வெளிக்காட்டாமல் தவிர்த்து வந்த விடயமொன்றை ஜனாதிபதியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே பகிரங்கமாகப் பேசியிருப்பது அமெரிக்க அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
டொனால்ட் ட்ரம்பின் மகன் எரிக் ட்ரம்பின் மனைவியும், குடியரசுக் கட்சியின் தேசியக் குழுவின் முன்னாள் இணைத் தலைவருமான லாரா ட்ரம்ப், பிரித்தானிய ஊடகவியலாளர் ஹரி கோல் தொகுத்து வழங்கும் யூடியூப் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டார்.
ஈரானுடனான போரினால் அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் அதிகரித்து பொதுமக்கள் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த யுத்தம் ஜனாதிபதி ட்ரம்பின் அரசியல் செல்வாக்கிற்கும் நற்பெயருக்கும் பாதிப்பை ஏற்படுத்துமா என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த லாரா ட்ரம்ப், டொனால்ட் ட்ரம்பின் வரலாற்றுப் பெருமை இன்னும் முழுமையாக எழுதப்படவில்லை என்றும், இருப்பினும் இந்த மோதல் இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் எனவும், ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் இறுதி இரண்டு வருடங்கள் மிக முக்கியமானவை என்றும் கூறினார்.
இதனிடையே, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் அவரது மருமகளின் அரசியல் மதிப்பீடு தொடர்பில் வினவப்பட்டது. ஈரானுடனான போர் இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்த சாத்தியமுள்ளது என்பதை ஏற்றுக்கொண்ட ட்ரம்ப், அதேநேரம் ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதைத் தடுத்துள்ளதால் இப்போராட்டம் தங்களுக்கு சாதகமாகவே அமைய வேண்டும் என்று வாதிட்டார்.
ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், அந்தப் பார்வையில் அணுகும்போது இது மக்களுக்குப் புரியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்க நிர்வாகத்தில் லாரா ட்ரம்ப் எந்தவித உத்தியோகபூர்வ பதவிகளையும் வகிக்கவில்லை என்ற போதிலும், போர் நீடித்தால் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகியவற்றின் கட்டுப்பாட்டைத் தக்கவைப்பதில் குடியரசுக் கட்சி சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதை ட்ரம்பின் நெருங்கிய வட்டாரத்தினர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ள அரியதொரு நிகழ்வாக இது பார்க்கப்படுகின்றது.
அத்துடன், ஈரானில் விடயங்கள் நகர்ந்த விதத்தை ஜனாதிபதி பெரிதும் விரும்பவில்லை எனவும், நிகழ்வுகள் மேலும் துரிதமாக முடிந்திருக்க வேண்டும் என்றே அவர் விரும்பினார் எனவும் லாரா ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், இடைக்காலத் தேர்தலுக்குள் ஈரான் யுத்தம் முடிவுக்கு வருமா என்று செப்டம்பர் மாதம் கேள்வி எழுப்பப்பட்டபோது அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மாறுபட்ட கருத்தை முன்வைத்திருந்தார்.
இதனை ஒரு யுத்தம் என்று தாம் அழைக்க மாட்டோம் எனக் குறிப்பிட்ட அவர், அமெரிக்கப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட 'மிட்நைட் ஹேமர்' (Midnight Hammer) மற்றும் 'எபிக் ஃபியூரி' (Epic Fury) ஆகிய இராணுவ நடவடிக்கைகளின் வெற்றிகளைப் பாராட்டியதுடன், இது குறித்து ஈரானிடமே கேட்க வேண்டும் என்றும் பதிலளித்திருந்தார்.
எவ்வாறாயினும், ஈரானுடனான மோதல் காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் அமெரிக்க வாக்காளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மூடீஸ் அனலிட்டிக்ஸ் (Moody's Analytics) நிறுவனம் கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட மதிப்பீட்டின்படி, போரின் முதல் மூன்று மாதங்களிலேயே அமெரிக்கக் குடும்பங்களுக்கு சுமார் 100 பில்லியன் டொலர் வரை பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதுடன், இது சராசரியாக ஒரு குடும்பத்திற்கு ஏறத்தாழ 750 டொலர்கள் கூடுதல் சுமையாகும். இந்த விவகாரம் தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு வெள்ளை மாளிகை உடனடியாகப் பதிலளிக்கவில்லை.
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in sri lanka news and world news on Thalaimurai.