உக்ரைன் மீதான ரஷியாவின் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது நூறு சதவீத கூடுதல் வரி விதிக்கும் புதிய மசோதா மீதான இறுதி வாக்கெடுப்பு அமெரிக்க நாடாளுமன்றத்தில் நாளை நடைபெறவுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளாக நீடித்து வரும் போருக்கு ரஷியாவின் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விற்பனையே முக்கிய நிதி ஆதாரமாக விளங்குவதால், பிற நாடுகள் அங்கிருந்து எரிபொருள் வாங்குவதைத் தடுத்து நிதி வரத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முனைப்பு காட்டி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, ரஷியாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது நூறு சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இந்தச் சட்ட வரைவு உருவாக்கப்பட்டுள்ளது.
'Lindsey O.Graham Sanctioning Russia and Iran Act of 2026' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதா ஏற்கனவே அமெரிக்க செனட் சபையின் நடைமுறை வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது. மேலும் ரஷியாவிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஐந்நூறு சதவீதம் வரை வரி விதிக்கவும் இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ரஷியாவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை பெருமளவில் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் அஜர்பைஜான் ஆகிய ஐந்து நாடுகள் மீது நூறு சதவீத வரி விதிக்க இந்த மசோதா பரிந்துரைக்கிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு உக்ரைன் போர் தொடங்கியதற்குப் பின்னர், ரஷியாவிடமிருந்து குறைந்த விலையில் அதிக அளவு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் முன்னணி நாடாக இந்தியா மாறியுள்ளது. இதனால், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்ட வடிவம் பெற்றால், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு நூறு சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் முதற்கட்ட நடைமுறை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற இந்த மசோதா மீதான இறுதி வாக்கெடுப்பு அமெரிக்க நாடாளுமன்றத்தில் செப்டம்பர் 17ஆம் திகதி நடத்தப்படவுள்ளது. அங்கு இந்த மசோதா இறுதி ஒப்புதலைப் பெற்ற பின்னர், சட்ட நடைமுறைக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கையொப்பத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in sri lanka news and world news on Thalaimurai.