மட்டக்களப்பு, சித்தாண்டியில் கணவனின் தாயார் வீட்டுக்குச் சென்ற குடும்பப் பெண்ணொருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்திவெளிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வியாழக்கிழமை மாலை 4.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் மாவடிவேம்பு ஆர்.டி.எஸ். வீதியைச் சேர்ந்த 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.
மாவடிவேம்பு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான 31 வயதுடைய கணவர், தொடர்ச்சியாக மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சம்பவ தினமான வியாழக்கிழமையன்று மனைவியின் கையடக்கத் தொலைபேசியை விற்று மது அருந்திய கணவருக்கும் மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சித்தாண்டி கலைமகள் வீதியிலுள்ள கணவனின் தாயாரிடம் முறையிடுவதற்காக மனைவி சென்றுள்ளார்.
அங்கு மனைவியைப் பின்தொடர்ந்து சென்ற கணவன், தனது தாயாரின் வீட்டிலேயே வைத்து மனைவியின் கழுத்துப் பகுதியில் கத்தியால் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், கணவன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலிஸ் அவசரப் பிரிவுக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சந்திவெளிப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். சந்தேகநபர் மது போதைக்கு அடிமையானவர் எனவும், கடந்த மாதம் போதைப்பொருளுடன் கைதாகியிருந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலத்தைப் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சந்திவெளி பெரும் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார், தலைமறைவாகியுள்ள கணவரைக் கைது செய்ய மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in sri lanka news and world news on Thalaimurai.