ரஷியா மற்றும் ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்கும் நோக்கில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட மசோதாவை நிறைவேற்ற அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மறைந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் லிண்ட்சே ஓ. கிரஹாம் பெயரிலான ‘ரஷியாவுக்கு எதிரான தடை மசோதா 2026’ கடந்த ஆகஸ்ட் மாதம் செனட் சபையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
தற்போது அமெரிக்க பிரதிநிதிகள் சபையிலும் இந்த மசோதா இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பிரதிநிதிகள் சபையின் விதிகள் குழு கூட்டத்தில் 7-க்கு 3 என்ற கணக்கில் ஒப்புதல் பெறப்பட்டதைத் தொடர்ந்து, அவையில் நடைபெற்ற முதல்கட்ட நடைமுறை வாக்கெடுப்பிலும் 214-211 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் மசோதா வெற்றி பெற்றுள்ளது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் இறுதி ஒப்புதலுக்குப் பிறகு, இந்த மசோதா அதிபர் டொனால்ட் டிரம்பின் கையெழுத்துக்காக அனுப்பி வைக்கப்படும். அவர் இதில் கையெழுத்திட்டு சட்டமாக்கினால், ரஷியாவிடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிசக்தி வாங்கும் நாடுகள் மீது 100 சதவீதம் வரை வரி விதிக்கும் அதிகாரத்தை அமெரிக்க அதிபர் பெறுவார்.
இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 30 சதவீதம் ரஷியாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் சூழலில், ஈரான் போர் அச்சுறுத்தல் நிலவிய கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் நாட்டின் எண்ணெய் இறக்குமதியில் 50 சதவீதத்திற்கும் மேல் ரஷியாவிலிருந்தே பெறப்பட்டது.
தற்போது ரஷிய கச்சா எண்ணெயை வாங்கும் இரண்டாவது பெரிய நாடாக விளங்கும் இந்தியாவுக்கு, இந்த மசோதா பெரும் பொருளாதார சவாலாக மாறும் வாய்ப்புள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த நடவடிக்கைகள் குறித்து இந்திய அரசு மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக மத்திய வெளியுறவுத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் தெரிவிக்கையில், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் மசோதா மீதான வாக்கெடுப்பு முடிவுகள் முழுமையாக வெளியான பின்னரே அடுத்தகட்ட சூழல் குறித்து தெளிவு கிடைக்கும் என்றும், அதன் அடிப்படையிலேயே இந்தியா தனது உரிய நிலைப்பாட்டையும் பதிலையும் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in sri lanka news and world news on Thalaimurai.