ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக இணைவதற்கான நடவடிக்கைகளில் கனடா ஈடுபட்டு வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இந்த முடிவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கனடாவை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைப்பது பகைமையை வளர்க்கும் செயல் என்று விமர்சித்துள்ள டிரம்ப், அவ்வாறு நடந்தால் ஐரோப்பிய நாடுகள் மீது பெரிய அளவில் வரி விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
ஐரோப்பிய தலைவர்கள் கனடாவைத் தங்கள் ஒன்றியத்தில் இணைக்கும் நோக்கத்துடன் செயல்படுவதாகக் குறிப்பிட்ட டிரம்ப், அந்த முடிவு கெட்ட உள்நோக்கத்துடன் அமையுமானால் ஐரோப்பிய நாடுகளுக்குக் கூடுதல் வரிகள் விதிக்கப்படும் எனவும், ஐரோப்பாவின் சில பகுதிகளில் வர்த்தக நடவடிக்கைகள் நிறுத்தப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், கனடா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது சிரிக்கத்தக்கது எனக் குறிப்பிட்ட அவர், அமெரிக்காவின் அண்டை நாடான கனடா ஒரு மோசமான வர்த்தகப் பங்குதாரராக இருப்பதாகக் குற்றம் சாட்டினார். அத்துடன், அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளைத் தாங்கிப் பிடிப்பதாகவும், தங்களிடம் கார்கள், கட்டடக் கட்டுமான மரங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் நிறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னதாக கனடாவை அமெரிக்காவின் 51-வது மாகாணமாக இணைக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து வந்த டிரம்ப், அதற்கு உடன்படாவிட்டால் கடுமையான வரிகள் விதிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். இதற்கு கனடா பிரதமர் மார்க் கார்னி கடும் கண்டனம் தெரிவித்த சூழலில், கனடா மீது அமெரிக்கா கடுமையான வரிகளை விதித்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் பெரும் விரிசல் உருவானது.
அமெரிக்காவிற்குத் தனது மொத்த ஏற்றுமதியில் ஏறக்குறைய 70 சதவீதத்தை மேற்கொண்டு வரும் கனடா, அமெரிக்காவை மட்டுமே சார்ந்திருப்பதைத் தவிர்க்கும் நோக்கில் செயல்படத் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாகவே, ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான முடிவை கனடா பிரதமர் வெளியிட்டார்.
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in sri lanka news and world news on Thalaimurai.