தமிழகத்தில் நிலவும் பல்வேறு சமகாலப் பிரச்சினைகள் குறித்துச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக அரசின் நிர்வாகச் செயல்பாடுகள் மற்றும் தவெக கூட்டணி குறித்துத் தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தமிழகத்தில் மின்வெட்டே இல்லை என அரசுத் தரப்பில் தொடர்ச்சியாகக் கூறப்பட்டு வந்தாலும், அமைச்சர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே மின்வெட்டு ஏற்படுவதாகவும், இதன் காரணமாக அலைபேசியின் டார்ச் வெளிச்சத்தில் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டிய அவலநிலை நிலவுவதாகவும் அவர் சாடினார்.
தாம்பரம் மாநகராட்சியில் சிலை திறக்கப்பட்ட பின்னரே அதற்கான டெண்டர் கோரப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தை அவர் வெளிச்சமிட்டுக் காட்டினார். ஊழலற்ற வெளிப்படையான ஆட்சி என்று கூறப்படும் நிலையில் இத்தகைய நிர்வாக முறைகேடுகள் எவ்வாறு நிகழ்கின்றன என்று அவர் கேள்வி எழுப்பினார். அதேபோன்று, அரசு அறிவித்த தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் இன்னும் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை என்றும், காமராஜர் மதிய உணவுத் திட்டம் உட்பட அண்ணா மற்றும் காமராஜர் பெயரிலான முக்கிய நலத்திட்டங்கள் தாமதப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் அதிருப்தி தெரிவித்தார்.
முதலமைச்சர் விஜய்யின் வெளிநாட்டுப் பயணம் குறித்தும் கேள்வி எழுப்பிய தமிழிசை சௌந்தரராஜன், முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றுள்ள அவரை யாரும் சந்திக்கக் கூடாது என்று கூறப்படுவது எந்த வகையிலும் நியாயமற்றது என்றார். முதலமைச்சரின் இந்தப் பயணத்தின் நோக்கம் மற்றும் அங்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த முழுமையான வெளிப்படைத்தன்மையை அரசு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இடைத்தேர்தல் களம் குறித்துப் பேசிய அவர், திமுகவின் அரசியல் உரையாடல்கள் நாகரிகமற்ற முறையில் அமைந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டினார். மேலும், தமிழகத்தில் இடைத்தேர்தல் களம் அமைவதற்கும், இதனால் பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதற்கும், கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டதற்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் செயல்பாடுகளே முக்கிய காரணம் என்றும், இந்தச் சூழலில் இடைத்தேர்தலில் மக்களுக்குச் சரியான தெளிவு இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in sri lanka news and world news on Thalaimurai.