சமீப காலங்களில் முழுமையாக சார்ஜ் செய்தாலும், ஸ்மார்ட்போனின் பேட்டரி மிக வேகமாக காலியாகிவிடுகிறது என பலரும் கவனித்து வருகின்றனர். இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக சமூக வலைதள செயலியான Instagram இருப்பதாக தொழில்நுட்ப நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். புகைப்படங்கள் மட்டுமல்லாமல், வீடியோக்கள், ரீல்ஸ், லைவ் ஸ்ட்ரீமிங் மற்றும் மெசேஜிங் போன்ற பல அம்சங்களை ஒரே செயலியில் வழங்குவதால், இது பேட்டரி பயன்பாட்டை அதிகரிக்கிறது.
இன்ஸ்டாகிராம் பயனர் பயன்படுத்தும் நேரத்தில் மட்டுமல்லாமல், பின்னணியிலும் தொடர்ந்து இயங்குகிறது. புதிய அறிவிப்புகள் அனுப்புதல், உள்ளடக்கம் தானாக அப்டேட் ஆகுதல் போன்ற செயல்களுக்காக இது இணையத்தையும் பேட்டரி சக்தியையும் தொடர்ந்து பயன்படுத்துகிறது. குறிப்பாக நெட்வொர்க் பலவீனமாக இருக்கும் சூழலில், செயலி அதிகமாக வேலை செய்ய வேண்டியதால் பேட்டரி வேகமாக குறைகிறது.
கடந்த சில ஆண்டுகளில் ரீல்ஸ் மற்றும் வீடியோ உள்ளடக்கங்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. உயர்தர (High Quality) வீடியோக்கள் திரை மற்றும் இணைய பயன்பாட்டை அதிகரிப்பதுடன், ஆட்டோமேட்டிக் ஸ்குரோலிங் வசதி காரணமாக ஒரு வீடியோ முடிந்தவுடன் அடுத்தது தானாக இயங்குகிறது. பயனருக்குத் தெரியாமலேயே நீண்ட நேரம் செயலி இயங்குவதால், சார்ஜ் விரைவாக காலியாகிறது.
மேலும், இன்ஸ்டாகிராம் லொகேஷன், கேமரா, மைக்ரோஃபோன் போன்ற அனுமதிகளை பயன்படுத்துகிறது. ஸ்டோரி அல்லது ரீல் உருவாக்கும்போது கேமரா நீண்ட நேரம் இயங்குவதால் பேட்டரி செலவு அதிகரிக்கிறது. அடிக்கடி பயணம் செய்பவர்களுக்குப் ஜிபிஎஸ் பயன்பாடும் கூடுதல் சுமையைக் கொடுக்கிறது. இதற்கு மேலாக, பழைய அப்டேட் செய்யப்பட்ட செயலியை பயன்படுத்தினால், அதிலுள்ள தொழில்நுட்ப குறைபாடுகள் பேட்டரி பயன்பாட்டை மேலும் அதிகரிக்கக்கூடும்.
இந்த சிக்கலை குறைக்க சில எளிய மாற்றங்களை செய்யலாம் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இன்ஸ்டாகிராம் செயலி மற்றும் போன் சாஃப்ட்வேரை எப்போதும் புதுப்பிக்கப்பட்ட நிலையில் வைத்திருக்க வேண்டும்.
வீடியோக்களுக்கான ஆட்டோமேட்டிக் ஸ்குரோலிங் வசதியை நிறுத்தலாம்.
தேவையற்ற நோட்டிஃபிகேஷன்களை கட்டுப்படுத்துவதன் மூலம் பின்னணியில் இயங்கும் செயல்களை குறைக்க முடியும்.
இன்ஸ்டாகிராமை முழுமையாக தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால் அதை திட்டமிட்டு, தேவையான அளவில் பயன்படுத்தினால், போன் சார்ஜ் விரைவாக குறையும் பிரச்சினையை கணிசமாகக் குறைக்க முடியும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in sri lanka news and world news on Thalaimurai.