உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள், தனது புதிய ஐபோன் மாடல்களை அறிமுகப்படுத்தும் போது பயனர்கள் மத்தியில் எப்போதும் அதிக எதிர்பார்ப்பு நிலவும். ஒவ்வொரு புதிய சீரிஸிலும் செயல்திறன், கேமரா மற்றும் தொழில்நுட்ப அம்சங்களில் மேம்பாடுகளை வழங்குவது ஆப்பிளின் வழக்கம்.
அந்த வகையில், அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் ஐபோன் 18 மற்றும் ஐபோன் 18e மாடல்கள் தொடர்பாக சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபோன் 18 சீரிஸில் செயல்திறனை அதிகரிக்கும் வகையில் புதிய A20 Processor Chip இடம்பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய சிப் மூலம் போனின் வேகம், செயல்திறன் மற்றும் ஆற்றல் பயன்பாடு மேம்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தற்போது உள்ள RAM திறனை விட அதிகமாக 9GB RAM வசதி ஐபோன் 18 மற்றும் ஐபோன் 18e மாடல்களில் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் பல செயலிகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தும் அனுபவம் மேலும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் 18 Pro மாடலில் கேமரா பிரிவில் பெரிய மாற்றங்கள் வரலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக, மாறுபடும் Aperture (Variable Aperture) வசதி இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வசதியின் மூலம் கேமரா லென்ஸுக்குள் வரும் ஒளியின் அளவை பயனர்கள் கட்டுப்படுத்த முடியும். இதனால் அதிக வெளிச்சம் காரணமாக புகைப்படம் பாதிக்கப்படுவது குறையலாம். மேலும், பின்னணி மங்கல் (Background Blur) மற்றும் புகைப்படத்தின் தோற்றத்தை விருப்பத்திற்கு ஏற்ப மாற்றும் வசதியும் மேம்படலாம்.
ஆப்பிளின் வருடாந்திர நிகழ்வு வழக்கமாக செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் நிலையில், ஐபோன் 18 சீரிஸ் தொடர்பான முழுமையான தகவல்கள் அப்போது வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இந்த அம்சங்கள் தொடர்பான தகவல்கள் அதிகாரப்பூர்வமாக ஆப்பிள் நிறுவனம் உறுதி செய்யும் வரை இவை எதிர்பார்ப்புகள் மற்றும் கசிவுகளாக மட்டுமே கருதப்பட வேண்டும்.
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in sri lanka news and world news on Thalaimurai.