சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொடுத்தால் வாழ்க்கையே மாறும் என்று யாரும் நினைக்க மாட்டார்கள். ஆனால் சீனாவைச் சேர்ந்த ஒரு மாணவர், அதையே செய்து இரண்டே ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான டாலர்கள் சம்பாதித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
சீனாவின் ஷாங்காயில் முதுகலைப் பட்டம் படித்து வரும் லீ, ஓய்வு நேரத்தில் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொடுத்தார். பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை பலருக்கு சைக்கிள் ஓட்டும் ஆர்வம் இருப்பதை அவர் கவனித்ததே இந்த பயணத்தின் தொடக்கம்.
சைக்கிள் ஓட்டுவது எப்படி என்பதை விளக்கும் சிறிய வீடியோக்களை லீ சமூக ஊடகங்களில் பகிர்ந்தார். இரண்டு மாதங்களுக்குள் முதல் மாணவர் அவரை அணுகினார். அதுவே பெரிய வாய்ப்பாக மாறியது.
இதுவரை 700-க்கும் மேற்பட்டோருக்கு லீ சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொடுத்துள்ளார். நான்கு வயது சிறுவர் முதல் 68 வயது முதியவர் வரை அவரது மாணவர்கள். ஒவ்வொருவரின் திறனை 10 நிமிடத்தில் புரிந்து கொண்டு, அதற்கேற்ப பொறுமையாகக் கற்றுக்கொடுக்கிறார்.
சைக்கிளில் வேலைக்குச் செல்ல விரும்பிய பலரும் அவரை நாடினர். ஆரம்பத்தில் எதிர்பார்க்காத இந்த ஆதரவு, இரண்டே ஆண்டுகளில் லீக்கு $50,250 வருமானத்தைத் தந்தது. ஒரு எளிய திறமை கூட சரியான முறையில் பயன்படுத்தினால் வெற்றியாக மாறும் என்பதற்கான சிறந்த உதாரணம் இது.